முதல்வரை களங்கப்படுத்தியதாக ஸ்டாலின் மீது 2 அவதூறு வழக்கு..தமிழக அரசு மனு தாக்கல்

Two Defamation cases against M.K.Stalin

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது 2 அவதூறு வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் பணியாளர் சீர்திருத்தத் துறை முதன்முதலாக இந்த ஆண்டு 10 பிரிவுகளின் கீழ் மாநிலங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டது. உள்கட்டமைப்பு, மின்வசதி, காவல்துறை பணியாளர் எண்ணிக்கை, மகளிர் காவலர் விகிதம் உள்ளிட்டவற்றில் அதிக மதிப்பெண் பெற்ற வகையில் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்தது. அதே சமயம், வர்த்தகத்தில் 14வது இடத்தில் தமிழகம் இடம் பெற்றது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அவரது ஆட்சி குறித்தும் கடும் விமர்சனம் செய்து கடந்த 28.12.2019ம் தேதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை முரசொலி நாளிதழில் வெளியானது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்ட 6 பேரை போலீசார் கைது செய்த விவகாரத்தில், அ.தி.மு.க. அரசு குறித்து விமர்சனம் செய்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கடந்த 29.12.2019ம் தேதி முரசொலியில் வெளியானது.

இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. அரசு குறித்தும் அவதூறு கருத்துகளை தெரி வித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில், பெருநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர், 2 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் மதிப்புடையவராக இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று பொதுமக்களிடம் நற்பெயருடன் ஆட்சி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் கெட்ட நோக்கத்தில் வேண்டுமென்றே இழிவான, மோசமான கருத்துகளை மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கூறியிருக்கிறார். எனவே, அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 500, 501ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

You'r reading முதல்வரை களங்கப்படுத்தியதாக ஸ்டாலின் மீது 2 அவதூறு வழக்கு..தமிழக அரசு மனு தாக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..மறு தேர்வு நடத்த திட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்