செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் திடீர் ரெய்டு.. எடப்பாடி அரசு மீது பாய்ச்சல்..

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதற்கு அவர், எடப்பாடி அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது, செந்தில்பாலாஜி, அதிமுகவை விட்டு பிரிந்து அ.ம.மு.க.வில் இருந்த போது அவர் மீது அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். அப்போதே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, அவர் ஜாமீனில் விடப்பட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் அதே வழக்கு குறித்து ஆவணங்களை தேடுவதற்காக சென்னையில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, கரூரில் உள்ள அவரது தம்பி வீடு, அலுவலகம், ராமேஸ்வரப்பட்டி கிராமத்தில் உள்ள் அவரது பெற்றோர் வீடு ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று காலையில் திடீர் சோதனை நடத்தினர்.

இது குறித்து, செந்தில்பாலாஜி கூறியதாவது:
நான் அ.ம.மு.க.வில் இருக்கும் போதே என் மீது இதே புகார் ெகாடுக்கப்பட்டது. ஆனால், எப்.ஐ.ஆரில் என் பெயர் கிடையாது. அதன்பிறகு நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையிலும் எனக்கும், அந்த குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால், இப்போது எடப்பாடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதே வழக்கில் காவல்துறையினரை அனுப்பி சோதனை நடத்துகிறார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் என்னை போட்டியிடாமல் செய்ய வேண்டுமென்பதற்காக இப்படி காவல்துறையினர் மூலமாக அழுத்தம் கொடுக்கிறார்கள். நான் இல்லாத போது என் வீட்டிற்கு சென்று, வேலை ஆட்களை வைத்து சோதனையிடுகிறார்கள்.
நான் இந்த வழக்கை நேரிடையாக சந்திக்கத் தயார். நான் இருக்கும் போது வீட்டுக்கு வந்து விசாரிக்கட்டும். நான் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரத் தயார். அதிமுகவில் நான் இருக்கும் போது எந்த வழக்கும் தொடரப்படவில்லை. நான் வெளியேறியதும் இப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எடப்பாடி அரசு செயல்படுகிறது
இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

You'r reading செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் திடீர் ரெய்டு.. எடப்பாடி அரசு மீது பாய்ச்சல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? ராகுல்காந்தி கேள்வி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்