மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..

அதிமுகவில் மாவட்ட வாரியாக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தற்போதே பணிகளை தொடங்கியுள்ளன. மேலும், பாமக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, கமலின் மக்கள் நீதிமய்யம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், அதிமுகவில் மாவட்ட வாரியாக முக்கிய நிர்வாகிகளுடன் இன்று(பிப்.10) முதல் 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த கூட்டங்களை நடத்துகிறார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல் கூட்டம் தொடங்கியது. இதில், கரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நகரச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு மதுரை மாநகர், மதுரை புறநகர், திண்டுக்கல், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

இதில் கூட்டணி குறித்த ஆலோசனைகள், சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்கள், மக்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

You'r reading மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் விஜய்க்கு சம்மன்.. வருமானவரித் துறை அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்