குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் முஸ்லிம்கள் விடிய விடிய போராட்டம்..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடசென்னையில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் விடிய, விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல், வெளியூர்களிலும் ஜமாத்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதற்கு பின்பு மீண்டும் ரவுண்டானா அருகே முஸ்லிம் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்தது.

இதையடுத்து, வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் கபில்சிபில் குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதனால், அவர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இணை கமிஷனர் கபில்சிபில் குமார், ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அங்கு விரைந்து வந்தார். அவர் ஆர்ப்பாட்டக்காரர்களை வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நள்ளிரவில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக கூறிவிட்டு சென்றனர்.

இதற்கிடையே, போலீஸ் தடியடியை கண்டித்து மாதவரம், அமைந்தகரை, மண்ணடி, புதுப்பேட்டை, எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை, திருச்சி, கோவை, செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஜமாத்களின் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.

இந்நிலையில், போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதற்கிடையே வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முதியவர் ஒருவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், அவர் இயற்கையாக மரணம் அடைந்ததாகவும், சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புவதாகவும் போலீசார் கண்டித்துள்ளனர்.

இது குறித்து, சென்னை மாநகர காவல் துறை ட்விட்டர் பக்கத்தில், இது பொய்யான செய்தி. இந்த பெரியவர் இறந்ததற்கும், சிஏஏ போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், “70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை CAA போராட்டத்தின்போது இறந்து விட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்து விட்டார் என்ற பொய்த் தகவலை பொது மக்கள் யாரும் நம்பவேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

You'r reading குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் முஸ்லிம்கள் விடிய விடிய போராட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய அமைச்சரிடம் என்ன கடிதம் கொடுத்தீர்கள்? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்