சிவானந்த குருகுலம் ராஜாராம் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்..

சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய ராஜாராம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.

சென்னை காட்டாங்குளத்தூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக சிவானந்த குருகுலத்தை நிறுவி, அதை நடத்தி வந்தவர் ராஜாராம். அவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த ராஜாராம் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தொண்டு என்று சொல்லுக்கு அடையாளமாகவும், அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தும் கொண்ட சிவானந்தா குருகுலத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாராம் இறப்பு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள்-முதியோர் எனப் பலருக்கும் ஆதரவுக் கரமாக இருந்து மறுவாழ்வு அளித்தவர். என்னுடைய பிறந்தநாளில் அவரது குருகுலத்திற்குச் சென்று அங்குத் தங்கியிருப்போருடன் அளவளாவி, நிதியுதவி வழங்கியிருக்கிறேன். அப்போது ராஜாராமின் தூய தொண்டுள்ளதையும் சலிப்பில்லாத அர்ப்பணிப்பையும் கவனித்துள்ளேன்.

அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆற்றிய தொண்டும் அவர் உருவாக்கிய சேவை அமைப்புகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். அதில் ராஜாராம் வாழ்ந்து கொண்டிருப்பார்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You'r reading சிவானந்த குருகுலம் ராஜாராம் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் முஸ்லிம்கள் பிரம்மாண்ட பேரணி.. மாவட்டங்களில் முற்றுகை போராட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்