பெரியார் குறித்த சர்ச்சை.. ரஜினிக்கு எதிரான மனு தள்ளுபடி

பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறிய ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது.

துக்ளக் பத்திரிகை ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, கடந்த 1971ம் ஆண்டில் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் படத்தைச் செருப்பால் அடித்தனர் என்று குறிப்பிட்டார். பெரியாரைக் கடவுள் மறுப்பாளர் என்ற ஒரு விஷயத்தை மட்டும் கூறி, கொச்சைப்படுத்துவதா? என்று திராவிட இயக்கத்தினர் கொதித்தெழுந்தனர். ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். ஆனால், ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறி விட்டார்.

இதையடுத்து, அவர் வீட்டருகே திராவிட இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பெரியாரை அவதூறாகக் குறிப்பிட்டு, இருபிரிவினிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் ரஜினி பேசியதாகக் கூறி, அவர் மீது தி.க. சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, கடந்த ஜன.18ல் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பின், ஜன.20ல் போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து, ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறு, எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை விசாரித்தார். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய, போதிய முகாந்திரம் இல்லை, கட்சி சார்பில் இந்த மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தார்.

You'r reading பெரியார் குறித்த சர்ச்சை.. ரஜினிக்கு எதிரான மனு தள்ளுபடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சினிமா இசை அமைப்பாளர் ஆகிறார் வீணை வித்வான்.. கின்னஸ் சாதனைக்கு 100 நிமிடத்தில் 100 பாடல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்