10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஜூன் 15க்கு தள்ளி வைப்பு..

SSLC Exam Postponed to june 15th.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாலும், பல மாவட்டங்களில் கொரோனா பரவி விட்டதாலும் இந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று பேச்சு அடிபட்டது.
ஆனால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த 12ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, ஜூன்1-ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மே31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து விட்டு, ஜூன் 1ம் தேதி முதல் தேர்வு எப்படி நடத்த முடியும்? பஸ், ரயில் ஓடாத நிலையில் வெளியூர்களில் முடங்கியுள்ள மாணவர்கள் எப்படித் திரும்ப முடியும்? என்று கேள்விகளை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. அனைவரின் வேண்டுகோளையும் ஏற்றுத் தேர்வுத் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூன் 15ம் தேதி மொழிப்பாடம், 17ம் தேதி ஆங்கிலம், 19ம் தேதி கணிதம், 20ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 22ம் தேதி அறிவியல், 24ம் தேதி சமூக அறிவியல், 25ம் தேதி தொழிற்பாடாம் நடத்தப்படும். கிருமிநாசினி தெளிப்பு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

You'r reading 10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஜூன் 15க்கு தள்ளி வைப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அம்பன் புயல் பாதிப்பு.. ஒடிசா, மேற்குவங்க முதல்வர்களுடன் அமித்ஷா பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்