சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது.. ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி..

Arrested R.S.Bharathi charges on Edappadi palanisamy.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்ததால், என்னைக் கைது செய்திருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். கைதான ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி வருமாறு:
பிப்ரவரி 15ம் தேதி அன்பகம் அரங்கத்திற்குள் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியது பற்றி செய்திகள் வெளியாயின. மறுநாளே அதற்கு மன்னிப்பும், மறுப்பும் வருத்தமும் தெரிவித்து விட்டேன். இது முடிந்து 100 நாளாகி விட்டது.


இப்போது சென்னையில் கொரோனா உச்சகட்டத்தில் இருக்கிறது. 8 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதைக் கவனிக்காமல், என்னைக் கைது செய்து சிறையில் வைக்க அதிமுக அரசு முடிவு செய்திருக்கிறது.எனக்கு 71 வயதாகிறது. நான் சர்க்கரை நோயாளி. இதை காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன். நான் ஜெயிலுக்கு செல்ல பயந்தவனல்ல. மிசா காலத்தில் ஜெயிலில் இருந்தவன். கலைஞருடன் பலமுறை ஜெயிலில் இருந்திருக்கிறேன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் நேற்று மாலைதான் ஒரு புகார் கொடுத்திருக்கிறேன். அதனால் கோபம் கொண்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு என்னைக் கைது செய்கிறார்கள்.
நான் எடப்பாடிக்கு ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. 27 ரூபாய்க்கு வாங்க வேண்டிய வேப்ப எண்ணெய்யைப் பல மடங்கு அதிகமான விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். நிறைய ஆதாரங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். அதனால், எடப்பாடி மற்றும் வேலுமணி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போடச் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, நான் உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குப் போட்டு, அதில் அரசு வழக்கறிஞர் கேட்டதால் வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த எப்.ஐ.ஆரை ரத்து செய்ய ஒரு மனுவும் போடப்பட்டுள்ளது. அதுவும் நிலுவையில் உள்ள நேரத்தில் இப்படி அவசரமாகக் கைது செய்கிறார்கள்.கலைஞர் 77வது வயதில் கைது செய்யப்பட்டார். என்னை 71 வயதில் கைது செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. நான் கைதானாலும், எங்கள் வழக்கறிஞர் அணி, எடப்பாடி மற்றும் வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை நடத்துவார்கள்.

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடாது. என்னைக் கைது செய்வதால் கொரோனா தொற்றைப் பயன்படுத்தி ஊழல் செய்துவரும் அதிமுக அமைச்சர்கள் தப்பிவிட முடியாது. நாங்கள் இன்னும் வேகமாகச் செயல்படுவோம். என்னைக் கைது செய்துள்ள போலீஸ் அதிகாரிகள் பாவம். அவர்கள் என்ன செய்வார்கள்? இன்னும் ஏழெட்டு மாதத்தில் அவர்கள் எங்களுக்குப் பாதுகாப்புக்கு வரப் போகிறார்கள்..
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

You'r reading சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது.. ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திடீர் கைது.. வன்கொடுமை சட்டத்தில் வழக்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்