தமிழகத்தில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா..

Covid-19 cases rises to 45000 in Tamilnadu.

தமிழகத்தில் இது வரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லியில்தான் அதிகமானோருக்குப் பாதித்து வருகிறது.


தமிழகத்திலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1974 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேரும் அடக்கம்.

தமிழகத்தில் நேற்று பாதித்த 1974 பேரையும் சேர்த்தால் தற்போது கொரோனா பாதிப்பு 44,661 பேருக்குக் கண்டறியப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று பல இடங்களில் முகாம்கள் அமைத்துக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில், 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 45 ஆயிரத்தை எட்டியிருக்கிறது.

பஹ்ரைனில் இருந்து வந்த 4 பேர், தாய்லாந்து 3, சவுதி 2, யு.ஏ.இ. 1, டெல்லி 20, மகாராஷ்டிரா 9, ராஜஸ்தான், கேரளாவில் இருந்து தலா ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அதே போல், தமிழகத்தில் நேற்று 18,782 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 7 லட்சத்து 10,599 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று 1415 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 178 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 2882 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 81 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 1865 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 32 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 709 பேருக்கும், திருவண்ணாமலையில் நேற்று 31 பேருக்குத் தொற்று உறுதியானதால் அம்மாவட்டத்தில் 671 பேருக்கும் இது வரை கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 38 பேர் பலியானதை அடுத்து, சாவு எண்ணிக்கை 435 ஆக உயர்ந்தது.

You'r reading தமிழகத்தில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தூக்கு போட்டு தற்கொலை செய்த சுஷாந்த் சிங் வீட்டில் போலீஸ் சோதனை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்