சாத்தான்குளம் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி..

Dmk announced Rs.25 lakhs for sathankulam pennix family.

கோவில்பட்டி சிறையில் மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு, தி.மு.க. சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழக காவல் துறையினர் நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையையும், மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி, சட்டையெல்லாம் ரத்தத்தின் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்சின் தாயும் - சகோதரியும் வேதனையோடும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுகிறது.

இறந்த இருவரின் உடலில் காயங்கள் நிறைந்திருப்பதை மருத்துவக் குறிப்புகளிலும் உறுதி செய்துள்ள நிலையில், உடல் கூராய்வு அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட - துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.க துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

கணவன்-மகன் என அன்பான இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணிக்குக் கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்தம் குடும்பத்திற்கு, தி.மு.க. சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading சாத்தான்குளம் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா.. 5 லட்சத்தை நெருங்குகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்