உன்னால புடுங்க முடியாது.. நீதிபதியை இழிவாக பேசிய போலீஸ்காரர் சஸ்பென்ட்.. ஏஎஸ்பி, டிஎஸ்பி மாற்றம்..

police constable abusing Magistrate suspended madurai highcourt.

உன்னால ஒன்றும் புடுங்க முடியாது என்று மாஜிஸ்திரேட்டை இழிவாகப் பேசிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லி கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். இதற்கு ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்துப் பேசவே, போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்து ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் அங்கு ஓடி வந்தார்.

அப்போது போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின்பு, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் மாற்றப்பட்டனர்.

இந்த சூழலில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்குச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மாஜிஸ்திரேட் சென்றார். அப்போது போலீஸ் நிலையத்தில் தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட், தந்தை மகன் வழக்கு தொடர்பான சில ஆவணங்களைக் கேட்டார். ஆனால், காவல் நிலையத்தில் உள்ளவர்கள் அவற்றைத் தர மறுத்துள்ளனர். மேலும், மாஜிஸ்திரேட் விசாரித்துக் கொண்டிருந்த போது மகாராஜன் என்ற காவலர் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன்பின், மாஜிஸ்திரேட் விசாரணை குறித்த தனது அறிக்கையை மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோரின் நடத்தைகளைக் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, மகாராஜன் தன்னை உன்னால் ஒன்றும் புடுங்க முடியாதுடா என்று இழிவாகப் பேசியதாகவே குறிப்பிட்டுள்ளார்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள், இன்று(ஜூன்30) ஏஎஸ்பி குமார் உள்ளிட்ட காவல் துறையினரை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர். இதன்படி, ஏ.எஸ்.பி. குமார் மற்றும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நீதிபதியைத் தரக்குறைவாகப் பேசிய காவலர் மகாராஜனை மட்டும் சஸ்பெண்ட் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.

You'r reading உன்னால புடுங்க முடியாது.. நீதிபதியை இழிவாக பேசிய போலீஸ்காரர் சஸ்பென்ட்.. ஏஎஸ்பி, டிஎஸ்பி மாற்றம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒடிடி வரிசையில் ராம் கோபால் வர்மாவின் 3 திரைப்படம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்