சாத்தான்குளம் கொலை வழக்கில் போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்.. மதுரை நீதிமன்றம் அனுமதி..

madurai court allows CBI to take custody of sathankulam Inspector.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரையும் 3 நாளில் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, இரவு முழுக்க கொடூரமாகத் தாக்கியதால்தான் இருவரும் இறந்தனர் என்று குற்றம்சாட்டி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இது தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், கான்ஸ்டபிள் முருகன், முத்துராஜ் ஆகியோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி, சிபிஐ கோரிக்கை குறித்து சிறைக் காவலில் உள்ள 5 பேரிடமும் தனித்தனியே கேட்டறிந்தார்.

சிபிஐ காவலில் செல்ல ஒப்புக் கொண்ட அவர்கள், சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கும் போது, தங்களது வழக்கறிஞர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டுமென்று கோரினர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரையும் வரும் 16ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் 5 நாள் அனுமதி கேட்ட நிலையில், 3 நாள் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

You'r reading சாத்தான்குளம் கொலை வழக்கில் போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்.. மதுரை நீதிமன்றம் அனுமதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜஸ்தான் காங். ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக திணறல்.. ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தஞ்சம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்