பெரியார் சிலை மீது காவி பெயின்ட் ஊற்றி அவமதிப்பு.. கோவையில் பரபரப்பு..

Saffron paint thrown on Periyar statue in Coimbatore.

கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலையைச் செய்த விஷமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை சுந்தராபுரம் பஸ் நிலைய வாயிலில் பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை மீது நேற்று நள்ளிரவில் யாரோ சில மர்ம ஆசாமிகள், காவி பெயின்டை ஊற்றிச் சென்றிருக்கிறார்கள். பெரியார் சிலை மீது வேண்டுமென்றே காவி ஊற்றியிருப்பதை இன்று காலையில் தான் மக்கள் கவனித்துள்ளனர். தகவலறிந்து, திராவிடர் கழகத்தினர் அங்குத் திரண்டு வந்து, பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, எப்போதோ பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்தார். இது தி.க.வினர் மட்டுமின்றி திராவிட இயக்கத்தினர் அனைவருக்குமே எரிச்சலை ஊட்டியது. அவர்கள் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில விஷமிகளால் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. அதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதே போல், கடந்த ஆண்டில் அறந்தாங்கியில் ஒரு பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சமீப காலமாக, சிலர் இந்து மதத்திற்கு எதிராகப் பேசுவதும், அதற்குப் பதிலடியாகப் பெரியார் சிலைகளை அவமதிப்பதும் தொடர்கிறது. இதில் திட்டமிட்ட சதி வேலைகள் இருக்கலாம் எனத் திராவிட சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.

You'r reading பெரியார் சிலை மீது காவி பெயின்ட் ஊற்றி அவமதிப்பு.. கோவையில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா பலி 2236 ஆக அதிகரிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்