தமிழகத்தில் கொரோனா பலி 3741 ஆக அதிகரிப்பு

corona spread continues in tamilnadu, increases 2.34 lakh cases.

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2.34 லட்சமாக அதிகரித்துள்ளது. பலியும் 3741 ஆக அதிகரித்துள்ளது.
சீன வைரஸ் நோயான கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொது இடங்களில் கூடுவதற்கும், பொது போக்குவரத்திற்கும் தடை நீடிக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளையுடன்(ஜூலை31) ஊரடங்கு முடிகிறது. இது நீட்டிக்கப்படுமா என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவுள்ளார். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் நேற்று(ஜூலை28) ஒரே நாளில் 6426 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 33 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 34,114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5927 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 72,883 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 82 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்தது.

சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1117 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 97,575 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 540 பேருக்கும், காஞ்சிபுரம் 373, மதுரை 225, திருவள்ளூர் 382 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 13,841 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,618 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 13,183 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. பல மாவட்டங்களில் நேற்று சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தர்மபுரி, பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 34 ஆயிரம் பேரில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 57,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You'r reading தமிழகத்தில் கொரோனா பலி 3741 ஆக அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய ராணுவத்தின் புதிய அத்தியாயம்.. இந்தியா வந்த ரஃபேல் பறவைகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்