அதிமுகவில் மீண்டும் பிளவு.. பிரச்சனையைத் தீர்க்க அமைச்சர்கள் தீவிர முயற்சி..

C.M. candidate issue burns in Admk.

அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என்று அதிமுக 2 ஆக உடைந்தது. மீண்டும் இரு அணிகளும் சேர்ந்த போது, ஆட்சிக்கு தலைமையாக எடப்பாடியும், கட்சிக்கு தலைமையாக ஓ.பி.எஸ்.சும் இருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி சமீபத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், முதல்வரைப் பாராட்டி கவிதை எழுதியிருந்தார். அதில் காலமெல்லாம் நீயே நிரந்தர முதல்வராகி என்று எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டார். அதாவது அவர் தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் முதல்வர் என்று சொல்லியிருந்தார். இதனால் ஓ.பி.எஸ். அணியினர் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதல்வரைத் தேர்ந்தெடுப்போம். கடந்த காலங்களில் அப்படித்தான் தேர்வு செய்தோம் என்று பதிலளித்தார். அதாவது, மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வருவார் என்பதை மறுக்கும் வகையில் பேட்டியளித்தார். இதற்குப் பிறகு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு ட்விட் போட்டார். அதில், எடப்பாடியார் என்றும் முதல்வர். அவர் தலைமையில்தான் தேர்தல் களம் காண்போம் என்று கூறியிருந்தார். மேலும், அதை ஓங்கியடித்துச் சொல்லும் வகையில் பேட்டியும் கொடுத்தார். அடுத்த நாள், அதையே அமைச்சர் உதயகுமாரும் சொன்னார்.
இது பற்றி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்ட போது, முதல்வர் வேட்பாளரைச் சொல்வதற்கு இப்ப என்ன அவசரம்? என்று எரிச்சலடைந்தார்.

இதற்குப் பிறகு, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர், அவர் பேட்டியளிக்கையில், முதல்வர் வேட்பாளர் குறித்து உரியக் காலத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று காலையில், கொடியேற்று விழா முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீட்டுக்குச் சென்று விட்டார். அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், வீரமணி உள்ளிட்ட 10 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அங்கும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடந்தது. இதன் பின்னர், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் மீண்டும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினர்.
இத்தனை ஆலோசனைக்குப் பிறகும் அமைச்சர்கள் யாரும் பத்திரிகையாளர்களிடம் வாய் திறக்கவில்லை. முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாகச் சந்தித்து ஒரே நேரத்தில் ஆலோசனை நடத்த முடியவில்லை என்றால், இருவருக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே, அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதும், அதைச் சரி செய்வதற்குத் தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதும் உறுதியாகி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களுடைய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading அதிமுகவில் மீண்டும் பிளவு.. பிரச்சனையைத் தீர்க்க அமைச்சர்கள் தீவிர முயற்சி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலு, சீக்கிரம் வா.. : இளையராஜா இதயம் கசிந்து உருக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்