ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..

High court quashed Assembly privelage commitee notices to Dmk MLAs.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு, சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக குட்கா, பான் மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பரவலாக இந்த பொருட்கள் பெட்டிக் கடைகளில் மறைமுகமாக விற்கப்படுகின்றன. கடந்த 2017ம் ஆண்டில் இது தொடர்பாகச் சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக பிரச்சனையைக் கிளப்பியது. அப்போது, சட்டசபைக்குள் பான்பராக், குட்கா பாக்கு பொட்டலங்களைக் கொண்டு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், எல்லா ஊரிலும் குட்கா, பான்மசாலா விற்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர். சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமன்று கோரி உரிமைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இதன்படி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், அந்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின், வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. பின்னர், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ஆகியயோர் பெஞ்ச் முன்பாக விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி பெஞ்ச் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வெளியிட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால், மீண்டும் புதிய நோட்டீஸ் அனுப்பத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

You'r reading ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நெறஞ்ச மனசுஅண்ணன் விஜயகாந்த்.. தமிழிசையின் வைரல் வாழ்த்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்