பச்சையப்பன் அறக்கட்டளை முறைகேடு.. விஜிலென்ஸ் விசாரிக்க திமுக கோரிக்கை..

Dmk demands vigilance enquiry in pachaippan trust scandals.

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் ரேட் பேசி, தகுதிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் வரும் ஆறு கல்லூரிகளில் தகுதியில்லாதவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை தருகிறது.

மறைந்த பேராசிரியர் அன்பழகன், என்.வி.என். சோமு, முரசொலி மாறன், நான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும், நீதிபதிகளும் படித்த புகழ்பெற்ற இந்தக் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர்கள் போன்ற 234 பேர் நியமனத்தில் 152 பேர் தகுதியற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது. நியமனங்களில் தலை விரித்தாடியுள்ள முறைகேட்டினை இது வெளிப்படுத்தியிருக்கிறது.

சிறந்த கல்வி நிறுவனம் ஒன்று இத்தகைய முறைகேடுகளால் மட்டுமின்றி - பிரின்சிபால் நியமனத்திலும் குளறுபடிகள் ஏற்பட்டு - அனைத்து விஷயங்களுமே உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுள்ளது.கடந்த 2014 முதல் 2016-க்குள் நிகழ்ந்துள்ள இந்த நியமனங்களில் தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள், தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள், பல்கலைக்கழக மான்யக்குழு வரையறுத்துள்ள தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனுபவமே இல்லாதவர்களுக்கு எல்லாம் உதவிப் பேராசிரியர் பதவியில் 14 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு - அவர்களுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோதமான நியமனங்கள் பெற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நேரத்தில், “அறக்கட்டளையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கும், புகழுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது” என்று உயர்நீதிமன்றமே வேதனைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி “இந்த நியமனங்கள் அனைத்தும் அடிப்படையிலேயே தவறானவை” என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி - 234 பேர் நியமிக்கப்பட்டதில் 60 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்பது – ஓர் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் எவ்வளவு மோசமாக ஒரு தேர்வு- அதுவும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தேர்வு நடைபெற்றுள்ளது என்பது மிகுந்த கவலையளிக்கிறது.ஆகவே பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள இந்த நியமனங்கள் குறித்து தனியாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் - “ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா” என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.புகழ்பெற்ற - மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு “விலங்கிட்டு” இது போன்ற முறைகேடுகள் நடைபெற இடம் தரக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

You'r reading பச்சையப்பன் அறக்கட்டளை முறைகேடு.. விஜிலென்ஸ் விசாரிக்க திமுக கோரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியா, சீனா படைகள் நேருக்கு நேர் அணிவகுப்பு.. கிழக்கு லடாக்கில் பதற்றம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்