நீட்தேர்வுக்கு எதிரான மக்கள் பாதை போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு..

M.K.Stalin support Makkal Pathai Movement stir against NEET.

நீட்தேர்வுக்கு எதிராக மக்கள் பாதை இயக்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதை இயக்கத்தினர் கடந்த 14ம் தேதி முதல் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சென்னை சின்மயா நகரில் அமைந்துள்ள மக்கள் பாதை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நீட் தேர்வு ரத்து என்பது சட்டப் போராட்டம், நீதிமன்றப் போராட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக அடைய வேண்டிய இலக்கு ஆகும். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மக்கள் பாதை மாநிலக்குழு உறுப்பினர் சந்திரமோகன் கூறி இருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆரா அருணா, சந்திரமோகன், அரவிந்த், தமிழ்செல்வி, கீதா, காசிநாகதுரை - ஆறு பேரின் அளப்பரிய தியாக உணர்வைப் பாராட்டும் அதே வேளையில், உங்களது போராட்ட நோக்கத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து விட்டீர்கள். எனவே, சாகும்வரை உண்ணாவிரதம் என்பதைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.உங்களது உள்ள உறுதியைக் கொண்டு மக்கள் சக்தியை அணிதிரட்டும் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading நீட்தேர்வுக்கு எதிரான மக்கள் பாதை போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. அடுத்த ஊரடங்கு அமல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்