கொரோனாவால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு 14ம் தேதி வாய்ப்பு...!

Neet: Fresh exam for those who missed it due to covid

கொரோனாவால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்த நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 16 லட்சத்து 37 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் போது இந்த தேர்வை நடத்தக்கூடாது என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தேர்வு நடைபெறும் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களால் தேர்வு எழுத முடியவில்லை என்றும், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் தேர்வு நடத்தப்பட்ட போது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தவேண்டும் என்றும், அவர்களது விடைத்தாள்களைத் திருத்திய பின்னர் முடிவுகளை 16ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் தேர்வு நடைபெறும் போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You'r reading கொரோனாவால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு 14ம் தேதி வாய்ப்பு...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம்? பட்டியலிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்