பொங்கலுக்கு இலவச பொருட்களுடன் மண்பானையும் வழங்க அரசுக்கு வேண்டுகோள்

Pot producers requests to TN Govt

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச பொருட்களுடன், மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பண்டைய காலத்தில் மக்கள் பெரும்பாலும் மண்பாண்டங்களையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது நவீனக் காலத்தில் மண் பாண்டங்களை எங்குமே காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20,000 மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். களிமண்ணை மூலதனமாக வைத்து தொழில் செய்கிறோம். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு கஷ்ட ஜீவனத்தில் வாழ்கிறோம். மண்பானைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் புரிந்து அனைவரும் மண்பானைகளைப் பயன்படுத்த முன் வரவேண்டும். மண்பாண்ட தொழில் அழிந்து வருவதாலும், மிகக் குறைந்த வருவாயே கிடைப்பதாலும் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட அதிகமாக யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால், மண்பாண்ட தொழில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். மண்பாண்ட தொழில் அழியாமல் காக்க மற்ற மாவட்டங்களில் உள்ளதுபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் பழகுவதற்கு நவீன தொழிற்பயிற்சி கூடத்தைக் கதர் கிராம தொழில் வாரியம் மூலம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மண் பாண்ட உற்பத்தியாளர்கள், பொங்கல் தினத்தன்று பொங்கல் வைக்கத் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி, வெல்லம், முந்திரி திராட்சை, கரும்பு போன்ற பொருட்களோடு, மண் பானை மற்றும் மண் அடுப்பையும் வழங்க வேண்டும் என்று கூறினர்.

You'r reading பொங்கலுக்கு இலவச பொருட்களுடன் மண்பானையும் வழங்க அரசுக்கு வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விளக்கு ஏற்றி பிறந்தநாள் கொண்டாடிய படக்குழு.. இது தமிழ் பாரம்பரியம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்