விசிகவுக்கு ஸ்கெட்ச் போடும் இரண்டு தலைகள்... துரைமுருகன் பொடி வைத்து பேசியதன் பின்னணி!

Two heads sketching Background of duraimurugan speech

"தேர்தல் நேரத்தில், கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியே போகலாம். புதிய கூட்டணியும் உருவாகலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பொடி வைத்து பேசியது தமிழக அரசியல் களத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அவரின் பேச்சின்படி எந்த கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது என்ற விசாரணையை திமுக உள்விவரம் அறிந்த பிரமுகர்களிடம் தொடங்கினோம். அப்போது அவர்கள் அனைவரும் கை காட்டியது விசிக மட்டுமே. திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்றி பாமகவை சேர்ப்பதில் திமுகவின் முக்கிய இரண்டு தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்ற தகவலும் கிடைத்தன.

அந்த இரண்டு தலைவர்களில் முக்கியமானவர் மற்றும் முதல் நபர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ``ஆரம்பத்தில் இருந்தே விசிகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டு பாமகவை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தவர் துரைமுருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே இதற்கான வேலையை செய்தார். பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டால், விசிக தானாக வெளியேறிவிடும் என்பதால் அத்திட்டத்தை தீட்டினார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

இந்த முறை அப்படிவிடக்கூடாது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவந்து விசிகவை வெளியேற்றி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்க தொடங்கியுள்ளார் துரைமுருகன். இதனால் துரைமுருகனுக்கு ஏற்படும் பலன், சொந்த மாவட்டத்தில் வன்னியர் தலைவராக தன்னுடைய பலத்தை கூட்டலாம். கட்சிக்குள்ளும் தனித் தலைவராக நிலைநிறுத்திக்கொள்வதோடு, பாமக வந்தால் அவர்களின் உதவியோடு சொந்த சமுதாய வாக்குகளை பெற்று தனது சொந்த தொகுதியில் எளிதாக வெற்றிக்கனியை பறிக்கலாம் எனக் கணக்கு போடுகிறார். இந்த அடிப்படையில்தான், ``தேர்தல் நேரத்தில், கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியே போகலாம். புதிய கூட்டணியும் உருவாகலாம் என சமீபத்தில் பொறி வைத்து பேசியிருக்கிறார்.

துரைமுருகனை போல, விசிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேலை பார்க்கும் இன்னொரு திமுக தலைவர் எ.வ.வேலு. திருவண்ணாமலை மாவட்ட திமுக தலைவராக இருக்கும் எ.வ.வேலு, விசிக மீது ஸ்கெட்ச் போடுவதற்கு காரணம், திருவண்ணாமலை மாவட்ட விசிக தலைவர் செல்வம்தான். எ.வ.வேலுவுக்கு நிகராக, சம பலத்துடன் மாவட்டத்தில் செல்வாக்கு உடன் வலம்வந்துகொண்டிருக்கிறார் விசிக செல்வம். இது வேலுவுக்கு பல முறை எரிச்சலை கொடுத்திருக்கிறது. இந்த முறை விசிக திமுக கூட்டணியில் இடம்பெற்றால், செல்வம் சீட் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

அப்படி சீட் கிடைத்தால் மாவட்டத்தில் அவரின் கை ஓங்கும் என்பதால் இந்த முறை விசிகவை திமுக கூட்டணியில் சேர விடாமல் தடுக்க நினைக்கிறார். இதுதொடர்பாக துரைமுருகனும், வேலுவும் விரைவில் தலைமையிடம் பேசுவார்கள்" என கூறுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே திமுக கூட்டணி முடிவாகும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!

You'r reading விசிகவுக்கு ஸ்கெட்ச் போடும் இரண்டு தலைகள்... துரைமுருகன் பொடி வைத்து பேசியதன் பின்னணி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு வருடமாக உணவு கொடுக்காமல் மனைவியை கழிப்பறைக்குள் பூட்டி வைத்த கணவன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்