மு.க.அழகிரி பற்றி திமுக உயர்நிலைக் குழுவில் விவாதிக்கப்படுமா? நவ.23ல் கூடுகிறது..

திமுக கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு வரும் 23ம் தேதியன்று கூடுகிறது. அதில் மு.க.அழகிரியின் அரசியல் மிரட்டல் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தனது தம்பி மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வதாக கூறிப் பார்த்தார். ஆனாலும், ஸ்டாலின் தலைமையிலான கட்சி, அவரை மீண்டும் சேர்க்கவில்லை. இதன்பிறகு அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்யப் போவதாக கூறியுள்ளார். நவ.20ம் தேதியன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசிக்கப் போவதாகவும், அதில் புது கட்சி ஆரம்பிப்பது குறித்து விவாதிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக உயர்நிலைக் குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வருகிற நவ.23ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் மற்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டாலும், மு.க.அழகிரியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், அதனால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மு.க.அழகிரி பற்றி திமுக உயர்நிலைக் குழுவில் விவாதிக்கப்படுமா? நவ.23ல் கூடுகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான காவல் பிரிவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்