மார்த்தாண்டம் ஆர்டிஓ இன்ஸ்பெக்டரின் காரில் 1.69 லட்சம் பணம் பறிமுதல்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளரின் காரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் 1.69 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் போலீசார் கடந்த சில தினங்களாக இந்த இரு அலுவலகங்களையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெருமாள், நெல்லைக்கு காரில் புறப்பட்டு சென்றார். அவரது காரை டிஎஸ்பி மதியழகன் தலைமையில் போலீசார் ரகசியமாக பின்தொடர்ந்தனர். நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதி அருகே சென்ற போது போலீசார், பெருமாளின் காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பணத்திற்கான ஆவணங்களை கேட்டபோது, பெருமாளிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை கைப்பற்றி பரிசோதித்தபோது 1.69 லட்சம் இருந்தது தெரியவந்தது. பின்னர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெருமாளை போலீசார் விசாரணைக்காக அங்குள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. இதன் பின்னர் போலீசார் பெருமாளை விடுவித்தனர். பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. புதிய வாகனங்களை பதிவு செய்வதற்காக புரோக்கர்கள் பெருமாளுக்கு பணம் கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து அவருக்கு பணம் கொடுத்த புரோக்கர்களை பிடித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் தீர்மானித்துள்ளனர்.

You'r reading மார்த்தாண்டம் ஆர்டிஓ இன்ஸ்பெக்டரின் காரில் 1.69 லட்சம் பணம் பறிமுதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊரெங்கும் மணம் வீசும் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்