கவர்னர் புரோகித்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. 7 பேர் விடுதலைக்கு கோரிக்கை..

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று அப்போது வலியுறுத்தினார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர், 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக, ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட்டன. இந்த விஷயத்தில் கவர்னரே முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அமைச்சரவையில் முடிவு செய்து, கவர்னருக்கு மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு செப்.9ம் தேதியன்று அனுப்பிய இந்த பரிந்துரை மீது முடிவெடுக்காமல் கவர்னர் 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

இதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு வந்த போது, கவர்னர் ஏன் இன்னும் முடிவெடுக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக உள்துறை செயலர், கவர்னரின் செயலகத்துக்கு கடிதம் அனுப்பி அமைச்சரவை பரிந்துரையின் தற்போதைய நிலை என்ன என்று கேட்டிருந்தார். இதற்கு கவர்னரின் அலுவலகம் அளித்த பதிலில் கூறப்பட்டதாவது: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சதித்திட்டம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று ஜெயின் கமிஷன் கூறியது. இதனடிப்படையில், சிபிஐ, ஐபி உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகளை உள்ளடக்கிய பல்துறை கண்காணிப்பு முகமை (எம்டிஎம்ஏ) அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் முடிவைப் பார்த்த பிறகுதான் கவர்னர் முடிவெடுப்பார். இவ்வாறு கவர்னர் பதிலளித்திருந்தார். கடந்த வாரம், பேரறிவாளன் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வாதிடும் போது, எம்டிஎம்ஏ விசாரணையில் பேரறிவாளன் தொடர்பாக எதுவும் விசாரிக்கப்படவில்லை.

அன்னிய சதி குறித்துதான் விசாரிக்கப்படுகிறது. எனவே, பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், அரசியல் சட்டப்பிரிவு 142ல் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கவர்னருக்கு இந்த விஷயத்தில் உத்தரவிட விரும்பவில்லை. அதே சமயம், இவ்விவகாரத்தில் 2 ஆண்டுகளாக கவர்னர் முடிவெடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தனர். இந்நிலையில், கவர்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பலவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் புரோகித்தைச் சந்தித்து, 7 பேர் விடுதலையில் விரைவாக நல்ல முடிவெடுக்க வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

You'r reading கவர்னர் புரோகித்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. 7 பேர் விடுதலைக்கு கோரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கணவனை வெளிநாட்டில் விட்டு வாய்ப்பு தேடி திரும்பிய நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்