மெரீனா பீச் உள்பட சுற்றுலா தலங்கள் டிச.14ல் திறக்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு..

மெரீனா பீச் உள்படச் சுற்றுலாத் தலங்களுக்கு டிசம்பர் 14ம் தேதி முதல் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு கொண்டு வந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இதை நீட்டிக்கும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கலாம். விடுதிகளும் செயல்படலாம். அதே போல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளும் டிச.7ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில்(2020-2021) சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு பிப்.1ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வரும் டிச.14ம் தேதி முதல் மெரினா பீச் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும். டிசம்பர்1ம் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வகையில் சமூக, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் இக்கூட்டங்களுக்கு போலீஸ் கமிஷனரிடமும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர்களிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.

வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை டிச.31ம் தேதி வரை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.எனவே, தமிழக அரசு மேற்கொள்ளும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

You'r reading மெரீனா பீச் உள்பட சுற்றுலா தலங்கள் டிச.14ல் திறக்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை பலாத்கார வழக்கில் நடப்பது என்ன? பரபரப்பு தகவல்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்