நாளை கல்லூரி வகுப்புகள் தொடங்குகின்றன: சுழற்சி முறை அறிவுறுத்தல்

டிசம்பர் 7ம் தேதி (திங்கள்) முதல் தமிழ்நாட்டில் இறுதியாண்டு கல்லூரி மாணவ மாணவியருக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் நிலையில் உள்ளரங்கங்களுக்குள் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்து சமுதாய, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம் என்றும், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவருக்கான வகுப்புகளை தொடங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை கல்லூரிகளில் பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவ மாணவியருக்கான விடுதிகளை திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, துணை மருத்துவ படிப்புகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன. மற்ற பருவத்திற்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், முதலாண்டில் பதிவு செய்துள்ள மாணவ மாணவியருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த மாணவ மாணவியரில் 50% மட்டுமே வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருப்பதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் நோய் பரவலை தவிர்க்கும்வண்ணம் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You'r reading நாளை கல்லூரி வகுப்புகள் தொடங்குகின்றன: சுழற்சி முறை அறிவுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்று 2வது டி20 போட்டி: ஸ்டார்க், ஜடேஜா இல்லை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்