திமுக கூட்டணியில் ஓவைசிக்கு இடமில்லை.. திமுக அவசர மறுப்பு..

திமுக கூட்டணியில் அசாதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியைச் சேர்க்கும் திட்டம் இல்லை என்று திமுக அவசர, அவசரமாக மறுத்துள்ளது.தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி(ஏஐஎம்ஐஎம்) மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாகும். இதன் தலைவர் அசாதீன் ஓவைசி, ஐதராபாத் எம்.பியாக உள்ளார். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் 51 வார்டுகளில் போட்டியிட்டு 44 வார்டுகளை வென்றிருக்கிறது. சமீபத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இந்த கட்சி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு. 5 தொகுதிகளில் வென்றிருக்கிறது.

இந்த அணி போட்டியிட்டதால், அம்மாநிலத்தில் லாலுவின் ஆர்.ஜே.டி கட்சி தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய முஸ்லிம் வாக்குகள் பிரிந்து அதன் வெற்றியைப் பாதித்தது. இதையடுத்து, ஓவைசி கட்சி, பாஜகவின் பி டீம் என்று சொல்லப்பட்டது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அதன் தமிழக தலைவர் வாக்கில் அகமது கூறியிருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக திமுகவின் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான், ஐதராபாத்திற்குச் சென்று ஓவைசியை சந்தித்துப் பேசிய படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. சென்னையில் வரும் 6ம் தேதி திமுக நடத்தும் கூட்டத்திற்கு ஓவைசிக்கு மஸ்தான் நேரில் அழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதை வாக்கீல் அகமது உறுதி செய்தார்.இதற்கிடையே, ஐதராபாத்தில் இருந்து இன்னொரு சிறுபான்மையினர் கட்சியை இறக்குமதி செய்வதா? என்று தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள ஐ.யூ.எம்.எல், மனிதநேய மக்கள் கட்சி போன்றவை கடும் அதிருப்தி அடைந்தன. இந்த சூழலில், திமுக தரப்பில் தற்போது அவசர, அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். திமுக கூட்டணியில் ஓவைசி கட்சியைச் சேர்க்கப் போவதில்லை. கூட்டணி பேசவே இல்லை என்று திமுக மறுப்பு தெரிவித்திருக்கிறது.

You'r reading திமுக கூட்டணியில் ஓவைசிக்கு இடமில்லை.. திமுக அவசர மறுப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்... மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்