ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு போட்டது பா.ம.க.தான்.. முதல்வருக்கு திமுக விளக்கம்..

ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தது பா.ம.க. கட்சியினர்தான் என்று முதல்வருக்கு திமுக பதிலளித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றும்போது, ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவிடம் கட்டக்கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்" என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தை, ஜா, ஜெ என்ற இரண்டு கோஷ்டி சண்டையில் அம்போ என்று விட்டனர். 1989-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர், பெருந்தன்மையோடு எம்.ஜி.ஆர். நினைவிடத்தை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அதே பெருந்தன்மையோடு, ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவாகரத்தில் நடந்து கொண்ட எங்கள் தலைவர் ஸ்டாலின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்தினர், கலைஞர் நினைவிடத்திற்கு கூட்டம் கூட்டமாய் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சியை கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலின் காரணமாக இப்படி அண்டப் புளுகை புளுகியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பினை அறிவித்தபோதும் சரி, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்தபோதும் சரி, எதிர்க்கட்சித் தலைவரோ, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களோ அதற்கு எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை.

ஆனால், ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள், எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. கட்சியினர்தான். ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி முழு பூசணிக்காயை சேற்றில் மறைப்பதைப் போல மறைத்து பேசியிருக்கிறார். இந்த போக்கு ஜெயலலிதாவுக்கு, இவர் செய்கின்ற பச்சை துரோகம் அல்லவா? நான்காண்டு காலமாக ஆட்சியில் இருந்த இவர், இதுவரை இதுபற்றி வாய் திறக்காமல், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தொடர்ந்து இவர் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது. முதலமைச்சர் பழனிசாமி போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது. இனியும் இப்படிப்பட்ட பொய்களை பேசி வருவாரேயானால், இவர்மீது சட்ட நடவடிக்கையை தி.மு.க. எடுக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார்.

You'r reading ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு போட்டது பா.ம.க.தான்.. முதல்வருக்கு திமுக விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சசிகலாவை வாழ்த்திய ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப்.. அதிமுகவில் திடீர் பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்