மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாய் கொன்ற டாக்டர்

செங்கல்பட்டை அடுத்த மதுராந்தகம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து, காரை மேலே ஏற்றிக் கொன்ற மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் கண்முன்னே நடந்த இந்த பயங்கரம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த கோகுல் குமார் (வயது 35) மருத்துவராவார். இவர் சென்னையை அடுத்த பொத்தேரியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் கீர்த்தனா. இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. கீர்த்தனா மேல் மருவத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் எச்ஆர் பிரிவில் பணியாற்றுகிறார்.கோகுல் குமாரும் கீர்த்தனாவும், கீர்த்தனாவின் பெற்றோருடன் வசித்து வந்தனர். கொரோனா காலத்தில் ஊரடங்கிலிருந்து கோகுல் குமார் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. தம்பதியரிடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு வழக்கம்போல கோகுல், கீர்த்தனா தம்பதியரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றியநிலையில் கோகுல், சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவைக் கழுத்தை அறுத்துள்ளார். கீர்த்தனாவின் தந்தை முராஹரி மகளைக் காப்பாற்றப் போராடியுள்ளார். கழுத்து அறுபட்ட நிலையில் மனைவியைக் கூந்தலைப் பிடித்து வெளியே இழுத்து வந்த கோகுல், அவரை தரையிலேயே தள்ளி காரின்மீது ஏறி, காரை மனைவி மீது ஏற்றியுள்ளார். அருகிலுள்ளவர்கள் காவல்துறையை அழைத்த நேரத்தில் அவர் காரில் விரைந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் போலீசார், கீர்த்தனாவின் பெற்றோர் முராஹரியையும், குமாரியையும் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உயிரிழந்த கீர்த்தனாவின் உடலை உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்த போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோகுல் சென்ற கார், சுங்கசாவடி அருகே ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே கவிழ்ந்துள்ளது. அச்சிறுப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று கோகுலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் டாக்டர் கோகுலை மதுராந்தகம் போலீசார் கைது செய்துள்ளனர்.

You'r reading மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாய் கொன்ற டாக்டர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிரிக்கெட் வீரர் தோனி இப்போது பயன்படுத்தும் ஷூவின் விலை என்ன தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்