தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு

தமிழகத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.158 கோடி செலவில் புதிய பள்ளி கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம், கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ.86 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 சேமிப்பு கிடங்குகள் மற்றும் 16 நெல் சேமிப்பு சைலோ கொள்கலன்கள் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் திறந்து வைத்தார்.

மேலும், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை, இணையதளத்தில் விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள www.mangalammasala.com என்ற வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி (செல்போன் அப்ளிகேசன்) ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

பள்ளி கல்வித்துறை சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம், மதுரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் நபார்டு கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய 22 வகுப்பறை கட்டிடத்தை தலைமை செயலகத்தில் இருந்தவாறு எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், அரியலூர், தர்மபுரி, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ.157 கோடியே 29 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் நள்ளிரவில் சூறைக்காற்றுடன் கனமழை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்