ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு.. தண்டோரா மூலம் எச்சரிக்கை

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஒகேனக்கல் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை தொடர்ந்து, தண்டோரா மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்தில் நீர் திறக்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை 10-வது நாளாக நீடிக்கிறது.

காவிரியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுவதால், கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

25 இடங்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், வருவாய், தீயணைப்பு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1.07 லட்சம் கனஅடியில் இருந்து 1 லட்சத்து 04 ஆயிரத்து 436 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 102 புள்ளி ஆறு எட்டு அடியாகவும், நீர் இருப்பு 68 புள்ளி மூன்று ஐந்து டிஎம்சியாகவும் உள்ளது.

குடிநீர் தேவைக்காக ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.

You'r reading ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு.. தண்டோரா மூலம் எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மம்மூட்டி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால்.. மிஷ்கினின் எரிச்சலூட்டும் பேச்சால் சர்ச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்