தினகரனை தடுப்பது ஏன்... உயர் நீதிமன்றம் கேள்வி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது ஏன்

தினகரனின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, தேரடி திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ், மன்னார்குடி துணை கண்காணிப்பாளருக்கும், மன்னார்குடி நகர காவல் ஆய்வாளருக்கும் மனு அனுப்பியுள்ளார்.

அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேறு தேதியில் அனுமதி கோரும்படி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், ஆகஸ்ட்டு 5-ஆம் தேதி நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காமராஜ் மனு அளித்தார்.

அந்த மனு பரிசீலிக்கப்படாததால் அனுமதி வழங்க கோரி காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் புது மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசியல் கட்சியினருக்கு உரிமை உள்ளது என்றார்.

மேலும், அரசியல் நிகழ்ச்சி நடத்த மனுதாரர் அனுமதி கேட்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, தினகரனின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதேன் எனக் கேள்வி எழுப்பினார். பின், மனுவுக்கு வரும் 23-ஆம் தேதியன்று பதிலளிக்க மாவட்ட காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

You'r reading தினகரனை தடுப்பது ஏன்... உயர் நீதிமன்றம் கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியில் அரசியல்வாதியாக களமிறங்கும் தனுஷ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்