சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகத்திற்கு முதலிடம்: மத்திய அரசு

கடந்த 2017ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் வழங்கி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

உலகின் பழமையான கலாசாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.

எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தனிச்சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற சுற்றுலாச் சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாடு, கடந்த 2017-ம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றது.

இதை மத்திய அரசின் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும்; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகவும் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்று வந்துள்ளது.

2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. இந்தக் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, சுற்றுலா ஆணையர் பழனிக்குமார் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகத்திற்கு முதலிடம்: மத்திய அரசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ருவாண்டா நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக வழங்கும் மோடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்