வதந்திகளை நம்ப வேண்டாம்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறைவு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில்,"நம் அனைவரின் உயிருக்கும் உயிரான கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகள் எதையும் அவர்தம் அன்பு உடன்பிறப்புகளான கழகத் தொண்டர்களும், கட்சி சார்பற்ற முறையில் தலைவர் அவர்களின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்து வரும் அனைத்து தரப்பு மக்களும் நம்ப வேண்டாம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதி அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரை நன்கு கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் தலைவர் கலைஞர் அவர்களை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம் - அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என அறிக்கை மூலம் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You'r reading வதந்திகளை நம்ப வேண்டாம்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கலைஞர் நூற்றாண்டு விழா காணவேண்டும்... ராமதாஸ் உருக்கம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்