ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது - தூத்துக்குடி ஆட்சியர்

ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது என தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த மே மாதம் மூடப்பட்டது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

அத்துடன், நிரந்தர பணியாளர்களை வைத்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 99 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது பொய்யான தகவல்; தமிழக அரசின் முடிவின்படி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலம் சேமிப்பு கொள்கலனில் கடந்த 17ஆம் தேதி கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அங்கிருந்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது - தூத்துக்குடி ஆட்சியர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'இந்த அரசையே முடக்கி விடுவேன்'- ஆவேசம் காட்டும் ட்ரம்ப்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்