தமிழக காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரி வழக்கு...

சீமா அகர்வால் தலைமையிலான காவல்துறை விசாகா குழுவை மாற்றியமைக்கக் கோரி வழக்கை வேறு அமர்வு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
 
காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பி சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து கடந்த 17ஆம் தேதி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை எனக் கூறி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
"சட்டப்படி இந்த குழுவில் ஒரு தலைமை அதிகாரியும் குறைந்தது மூன்று உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.  அவர்களில் ஒருவர் பெண்கள்  அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.
ஆனால் டிஜிபி அமைத்துள்ள இந்த குழுவில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இடம்பெறவில்லை. மேலும் இந்த குழு உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது" என மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.  
 
"மேலும் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் சட்டவிதிகளை பின்பற்றி,  குழுக்களை அமைக்க உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,  அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்துறை செயலாளர்களுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் கோரிக்கை விடுத்தார். 
 
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில்ரமானி, நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு, மனுவை வேறு அமர்வுக்கு மாற்றி  உத்தரவிட்டது.

You'r reading தமிழக காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரி வழக்கு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மு.க.ஸ்டாலின் காலில் விழுவதை தொண்டர்கள், நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்