தவறான அறுவை சிகிச்சை... தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தவறான அறுவை சிகிச்சை... அரசு பதிலளிக்க உத்தரவு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யாததால், 10 லட்சம் இழப்பீடு கோரி, பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம் என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது குழந்தை பிறந்தவுடன், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுசம்பந்தமான சான்றிதழும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தனம் கருவுற்று, 3ஆவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் தனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி தனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "இரு பெண் குழந்தைகளுக்கான அரசு உதவிகளைப் பெற்று வரும் நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தையை பெற்றதால் அரசின் உதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார் என்பதால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மருத்துவமனை அதிகாரிக்கும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

You'r reading தவறான அறுவை சிகிச்சை... தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைச்சர் மீது ஊழல்... நடவடிக்கை எடுக்காதது ஏன்..?- ராமதாஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்