தண்டவாளத்தில் சிமெண்ட் கல்: 3 மாணவர்கள் கைதுnbsp

வேளச்சேரி அருகே ரயில் தண்டவளாகத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 
வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு கடந்த 31ஆம் தேதி இரவு பயணிகள் ரயில் புறப்பட்டது. சிறிது நேரத்தில், ரயிலின் அடிப்பகுதியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. உடனே,ஓட்டுநர் ரயிலை பாதி வழியில் நிறுத்தி, இறங்கி சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் சிமென்ட் கற்கள் சிதறி கிடந்தன.
 
இது தொடர்பாக ஸ்டேசன் மாஸ்டர், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதனிடையே, தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு, நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், இனிமேல் இதுபோன்ற செயல் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
 
இதனை அடுத்து உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், சிலாபுகள் உடைக்கப்பட்டு அதனுள்ளிருக்கும் கம்பிகள் மட்டும் காணாமல் போனதை கண்டு பிடித்தனர். பணத்திற்காக இரும்பு கம்பிகளை திருடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
 
அதன்படி வேளச்சேரி முதல் தரமணியில் உள்ள பழைய இரும்புக் கடைகளில் போலீசார் விசாரணை செய்ததில் இரண்டு சிறுவர்கள் இரும்பு கம்பிகளை கொடுத்து பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளம் சிறார்களை போலீசார் கைது செய்தனர்.
 
விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஐடிஐ மாணவர்கள் என்றும் பிறந்தநாள் விழாவிற்கு நண்பர்களுக்கு ட்ரீட் வைப்பதற்காக பணம் இல்லாததால் இரும்புக் கம்பிகளை திருடியதாக ஒத்துக் கொண்டனர். தண்டவாளத்தில் சிலாபுகளை போட்டு அதன் மீது ரயில் ஏறி சென்ற பிறகு, உடைந்த சிலாபிலிருந்து  கம்பிகளை மட்டும் திருடி பழைய இரும்பு கடையில் விற்றதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  கைதான 3 சிறுவர்களை  கெல்லீஸ் அரசு சிறார் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

You'r reading தண்டவாளத்தில் சிமெண்ட் கல்: 3 மாணவர்கள் கைதுnbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடு தழுவிய பந்த்க்கு திமுக ஆதரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்