பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?- நீதிமன்றம் கேள்வி

உயர் நீதிமன்றம் கேள்வி

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

தனியார்  சி.பி.எஸ்.ஸி பள்ளிகளில் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கப்படக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இரண்டாம் வகுப்பு வரை இரு படங்களும் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை நான்கு பாடங்களை மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியுள்ளதை பின்பற்ற வேண்டும் எனவும், அவர் உத்தரவிட்டிருந்தார். 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அனைத்து மாநில அரசுகளுக்கும், இது சம்பந்தமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்த மாநில அரசும் இதுவரை பதில் அளிக்கவில்லை எனவும், மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதை பதிவு செய்த நீதிபதி கிருபாகரன் அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், அந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். பின்னர் இந்த உத்தரவு சி.பி.எஸ்.ஸி பள்ளிகளுக்கு மட்டுமல்ல எனவும், நீதிபதி கிருபாகரன் குறிப்பிட்டார்.

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டு உள்ளதா? என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறு சுற்றறிக்கை அனுப்ப தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என எச்சரித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

You'r reading பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?- நீதிமன்றம் கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருநங்கையை போன்று வேடமிட்ட கிரிக்கெட் வீரர் கம்பீர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்