எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்கு: தனி நீதிமன்றம் தொடக்கம்

தமிழ்நாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இது குறித்து மூத்த வழக்கறிஞர் அஸ்வினிகுமார், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், "ஜெயில் தண்டனை பெறும் அரசியல்வாதிகள் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளில் சேர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மாநிலங்களில் ரூ.7.8 கோடி செலவில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி டெல்லியில் 2 சிறப்பு நீதிமன்றமும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா, மராட்டியம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தனி நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 செசன்ஸ் அந்தஸ்து நீதிமன்றம், 5 மாஜிஸ்திரேட்டு ஆகும்.

தமிழ்நாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டது. உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி இதற்கான அரசாணை பிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்கான தனி நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் துவக்கி வைத்தார். நீதிபதி முரளிதரன், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

You'r reading எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்கு: தனி நீதிமன்றம் தொடக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி..?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்