தொழிலதிபரை கடத்திய கும்பலை கதி கலங்க வைத்த காஞ்சி போலீஸ்

காஞ்சிபுரத்தில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு

காஞ்சிபுரத்தில், தொழிலதிபரை மீட்க காவல்துறை மேற்கொண்ட கார் சேஸிங் நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல் கும்பல், அந்த நபரை இறக்கிவிட்டு தப்பி ஓடியது.

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் பிரபல பல்பொருள் அங்காடி உரிமையாளர் பசூல் ரகுமானை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் கடத்தியது. அவரது மகன் ஜெயாரூதீனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் கேட்டு அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

மிரண்டு போன ஜெயாரூதீன் காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்போது கடத்தல்காரரிடம் இருந்து வந்த போனை, துண்டிக்காமல் தொடர்ந்து பேசுமாறு ஜெயாரூதீனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பேசிக் கொண்டிருந்த போது, கடத்தல்காரர்கள் இருக்கும் இடத்தை செல்போன் டவர் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். கடத்தல்காரர்கள் கிராம உட்புற சாலைகளை மட்டுமே பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. காஞ்சிபுரம்- திருவண்ணாமலை இடையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.

அந்த கும்பலை பின் தொடர்ந்த காவல்துறை, செய்யாறு அடுத்த பிரம்மதேசம் அருகே கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தது. அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல்காரர்கள் பசூல் ரகுமானை வயல்வெளியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

சுமார் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தொழிலதிபரை பத்திரமாக மீட்ட காஞ்சி காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

You'r reading தொழிலதிபரை கடத்திய கும்பலை கதி கலங்க வைத்த காஞ்சி போலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆண்மையை மிகுதிப்படுத்தும் உட்டியாணா பயிற்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்