நிறைமாத கர்ப்பிணிக்கு உதவி செய்ய பரிசலில் வந்த 108

108 Ambulance staff came coracle to help Pregnant women

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு உதவி செய்வதற்கு அவசர கால மருத்துவ பணியாளர்கள் பரிசலில் வந்துள்ளனர்.

சிறுமுகையை அடுத்த காந்தவயலை சேர்ந்த கூலி தொழிலாளி நஞ்சப்பன் (வயது 37). இவரது மனைவி கவிதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு கடந்த ஞாயிறன்று அதிகாலை 5:15 மணிக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. நஞ்சப்பன், தனது மனைவிக்கு மருத்துவ உதவி வேண்டி 108 ஆம்புலன்ஸூக்கு தொடர்பு கொண்டார்.

நஞ்சப்பனின் வீட்டுக்குச் செல்லும்படியாய் அவசர கால மருத்துவ பணியாளர் ரோஜா மற்றும் ஓட்டுநர் அருண் குமார் ஆகியோர் புறப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக காந்தவயலுக்குச் செல்லும் வழியில் லிங்கராஜபுரம் வன சோதனை சாவடி அருகேயுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது. ஆகவே, அதன் வழியாக ஆம்புலன்ஸை கொண்டு செல்ல இயலவில்லை. ஆனாலும், பிரசவ வேதனையில் இருக்கும் கவிதாவுக்கு உதவுவதற்காக சோதனை சாவடிக்கு 500 மீட்டர் முன்பாகவே வாகனத்தை நிறுத்தி விட்டு ரோஜாவும் அருண்குமாரும் பரிசலில் நீரை கடந்து சென்றுள்ளனர். மறுகரையில் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை கேட்டு வாங்கி, நஞ்சப்பனின் வீட்டை அடைந்தனர்.

மருத்துவ பணியாளர்கள் சென்று சேர்ந்தபோது, கவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால், குழந்தையின் கை, கால்கள் நீலநிறமாக மாற ஆரம்பித்திருந்தன. குழந்தைக்கு ஆக்ஸிஜனும், வெப்பமும் தேவைப்படுவதை உணர்ந்த ரோஜாவும் அருண்குமாரும் தொப்புள் கொடியை வெட்டி, குழந்தையை இருசக்கர வாகனத்திலும், பரிசலிலும் கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

சுற்றுப்பாதையில் கவிதாவை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படியாய் வேறொரு வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கிருந்த தலைமை மருத்துவர் சேரலாதன், பிரசவத்தில் கவிதாவுக்கு அதிக இரத்தம் வெளியேறியதை கண்டுபிடித்து, உடனடியாக மேல் சிகிச்சைக்காக அவரை கோயம்புத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடைகள் மத்தியிலும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு உயிர்களை காப்பாற்றிய மருத்துவ பணியாளர்களை பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டினர்.

You'r reading நிறைமாத கர்ப்பிணிக்கு உதவி செய்ய பரிசலில் வந்த 108 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்க குழந்தை இப்படி உட்கார்ந்தா...அவ்ளோதான்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்