மாரடைப்பால் உயிரிழந்த அதிகாரி- 8 லட்சம் வழங்கிய மாவட்ட காவல்துறை

The officer who died of a heart attack was a district police officer who provided 8 lakh

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் துணை ஆய்வாளர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார். காவல்துறையினர் நிதி திரட்டி அவரது மகளுக்கு வழங்கினர்.


திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அண்ணாமலை. இவர் கடந்த அக்டோபர் 12ம் தேதி நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார். திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே உயிரிழந்தார்.


அண்ணாமலையின் மனைவி பத்து ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இவரது மகள் ஜெயஸ்ரீ, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (NEET) சென்னையில் பயிற்சி பெற்று வந்தார். தந்தையும் மரித்து விட்டதால், பயிற்சியை தொடர பொருளுதவி இல்லாமல் நிறுத்திவிடும் நிலை ஜெயஸ்ரீக்கு ஏற்பட்டது.


திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஜெயஸ்ரீக்கு இயன்ற அளவு உதவி செய்ய விரும்பியது. ஆகவே, உதவி செய்ய விருப்பமுள்ள காவலர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை ஜெயஸ்ரீக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிடித்தம் செய்யப்பட்ட தொகை 8 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை நவம்பர் 4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி மற்றும் காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மறைந்த அண்ணாமலையின் மகள் ஜெயஸ்ரீயிடம் வழங்கினர். வடக்கு மண்டல ஐ.ஜி., பி.நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் உடன் இருந்தனர்.

You'r reading மாரடைப்பால் உயிரிழந்த அதிகாரி- 8 லட்சம் வழங்கிய மாவட்ட காவல்துறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீபாவளி ஸ்பெஷல் : காரசாரமான மைதா பிஸ்கட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்