மொபைல் செயலி மூலம் பணமோசடி: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

Remote-access apps used to steal money from account

பணமில்லா பரிவர்த்தனை தற்போது நாடு முழுவதும் பரவலாகி வருகிறது. வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி காப்பீடு, ரயில் பயணச்சீட்டு ஆகியவற்றுக்கும் பணமில்லா பரிவர்த்தனை மூலமே தொகை செலுத்தப்படுவது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பரிவர்த்தனைகள் வங்கிகளின் செயலிகள் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் செயலிகள் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பம் மற்றும் செயலிகள் பற்றி போதுமான அறிவு இல்லாத மக்கள் பணமில்லா பரிவர்த்தனை செய்ய முயற்சிக்கும்போது மோசடி நபர்களிடம் சிக்கி பணத்தை இழக்க நேரிடுகிறது. பல நேரங்களில் படித்தவர்கள் கூட மோசடிக்கு பலியாகி விடுகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் ஒருவரே ஒரு லட்சம் ரூபாயை மோசடி நபர்களிடம் இழந்துள்ளார். சிண்டிகேட் வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி நாராயண் ஹெக்டே. இவர் இ-வாலெட் என்னும் முறையில் பணமில்லா பரிவர்த்தனை செய்து வந்தார். புதிதாக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியதால், அதில் பணமில்லா பரிவர்த்தனைக்கான செயலியை நிறுவுவதற்கு விரும்பினார். இணையதளத்தின் மூலம் அதற்கான உதவியை தேடினார். தளத்தில் கிடைத்த ஒரு தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசியவர், 'எனிடெஸ்க்' (AnyDesk) என்னும் செயலியை மொபைல் போனில் நிறுவுவதற்கு நாராயணுக்கு வழி கூறியுள்ளார். பின்னர், தொடர்ந்து வரும் தகவல்களை தம்மோடு பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாராயண், தமக்கு அவர் உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு, மோசடி நபர் கேட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். உடனே, அவர் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பரிமாற்றத்திற்கான தகவல் நாராயண் ஹெக்டேவுக்கு வந்துள்ளது. ஒருங்கிணைந்த பணபட்டுவாடா பயனர் இடைமுகத்தை பயன்படுத்தி இந்தப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை, நாராயண் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை மூலம் தெரிய வந்துள்ளது.

இதுபோன்று 'ட்ம்வியூவர்' (teamviewer) 'வெப்எக்ஸ்' (webex)போன்ற செயலிகளைக் கொண்டும் மற்றொருவருடைய போனில் உள்ள வங்கி செயலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப ஆய்வு பிரிவு, 'எனிடெஸ்க்' போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்யுமாறு மோசடி பேர்வழிகள் கூறலாம். அதை தரவிறக்கம் செய்து கிடைக்கும் ஒன்பது இலக்க எண்ணை தங்களிடம் பகிருமாறு வங்கி வாடிக்கையாளரை கேட்டு, அதன்பிறகு ஸ்மார்ட்போனில் சில அனுமதிகளை கொடுக்கும்வண்ணம் நயமாக பேசி, வாடிக்கையாளரின் போனை தொலைவிலிருந்து இயக்கக்கூடிய அனுமதியை பெற இயலும்.

பின்னர், வாடிக்கையாளரின் போனில் ஏற்கனவே பயனில் இருக்கும் வங்கி செயலிகளை பயன்படுத்தி மோசடியாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது என்றும் அது குறித்து வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை எச்சரிக்குமாறும் பிப்ரவரி 14ம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தை சரியாக கணிப்பது அவசியம்; போனில் யாரோ கேட்கும் விவரங்களை கொடுத்துவிட்டால் பணம் பறிபோய் விடும்!

You'r reading மொபைல் செயலி மூலம் பணமோசடி: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு - இரு நாட்டு உறவு வலுப்பெறும் என சல்மான் உறுதி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்