டெலிகிராம் செயலி: அலர்ட் இல்லாத செய்தி

New features in Telegram App

'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது.


'டெலிகிராம்' செயலி மூலம் ஒருவருக்கு செய்தி அனுப்பும்போது, அந்தச் செய்தி போய் சேர்ந்ததும் அறிவிப்பு ஒலி எழத்தேவையில்லை என்று அனுப்புபவர் நினைத்தால், 'சைலண்ட்' செய்தியாக அனுப்பக்கூடிய சிறப்பம்சம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


செய்தி யாருக்குச் செல்கிறதோ அவர் முக்கியமான கூட்டத்தில் இருக்கக்கூடும் அல்லது உறங்கிக் கொண்டிருக்கக்கூடும். ஆகவே, இந்தச் செய்தி அவருக்குத் தொந்தரவு தரக்கூடாது என்று எண்ணும் பட்சத்தில், அனுப்புகை (send)பொத்தானை சற்று நேரம் அழுத்திக் கொண்டே (hold) இருந்தால், ஒலி எழுப்பாத செய்தியாக (send without sound) அனுப்பக்கூடிய தெரிவு காட்சியளிக்கும். அதை தெரிவு செய்து அனுப்பினால் செய்தி போய் சேரும்போது ஒலி எழும்பாது. திரையில் மட்டுமே புதிய செய்தி வந்திருக்கும் அறிவிக்கை தெரியும்.


வீடியோ என்னும் ஒளிக்கோவை அனுப்பப்படுமானால் அது சிறிய படங்களின் (thumbnail) தொகுப்பாக காட்சியளிக்கும். இதன்மூலம் அந்த வீடியோவில் நீங்கள் இருக்குமிடத்தை எளிதாக கண்டுபிடித்து பார்க்க இயலும். செய்தியோடு இணைந்த ஒளிக்கோவை அனுப்பப்படுமானால், வீடியோவின் எந்தப் பகுதி செய்தியோடு தொடர்புடையது (timestamp) என்பதை குறித்து அனுப்ப இயலும். அதை சொடுக்குவதன் (click) மூலம் வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் காணலாம்.


அசைவூட்டப்பட்ட (animated) இமோஜிக்களை அனுப்பக்கூடிய வசதியையும் 'டெலிகிராம்' அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


You'r reading டெலிகிராம் செயலி: அலர்ட் இல்லாத செய்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மனம் கைவசம்; உலகம் உங்கள் வசம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்