வாட்ஸ் அப் நிறுவனத்தின் நான்காம் தூண் வெளியேறியது!

Whats app chief commercial officer resigned

வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்து வந்த இந்தியர் நீரஜ் அரோரா, பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணி செய்துள்ளார்.

வாட்ஸ் அப் நிறுவனத்தை கடந்த 2014-ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. தொடர்ந்து, வாட்ஸ் அப் நிறுவனத்தை தொடங்கிய பிரையன் ஆக்டன் முதலில் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா முறைகேடு விவரம் வெளியான போது பிரையன் ஆக்டன், "ஃபேஸ்புக்கை மூடும் நேரம் வந்து விட்டது," என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். ஆக்டன், ஜேன் கோம் நிர்வாகத்தின் கீழ் வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர் நீரஜ் அரோரா. வாட்ஸ் அப் நிறுவனத்தில் சேர்ந்த 4-வது ஊழியர் இவர். இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் டெல்லி ஐ.ஐ.டி- யில் படித்தவர். 2011-ம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தில் நீரஜ் பணிக்குச் சேர்ந்தார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன் வாட்ஸ் அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் கோம் தன் பதவியை துறந்தார். பேஸ்புக் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் வெளியேறியதாகக் சொல்லப்பட்டது. அடுத்ததாக இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீரஜ் நியமிப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பேஸ்புக் நிர்வாகமோ கிறிஸ் டேனியல் என்பவரை வாட்ஸ் அப் தலைவராக நியமித்தது. உள்ளுக்குள் இருந்த புகைச்சல் காரணமாக, வாட்ஸ் அப் நிறுவனத்தை விட்டு நீரஜ் அரோராவும் வெளியேறியுள்ளார்.

"காலம் பறந்து செல்லலாம். ஆனால், நினைவுகள் மறைவதில்லை. பிரையனும் ஜேனும் என்னை வாட்ஸ் அப் நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டனர். இத்தனை ஆண்டுகள் ஓடிப்போனதை நம்ப முடியவில்லை. அது ஏற்ற இறக்கம் நிறைந்த ஒரு பயணம்" என்று நீரஜ் தன் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தோடு சில காலம் மகிழ்ச்சியாக செலவழிக்கப் போவதாக நீரஜ் கூறியுள்ளார்

You'r reading வாட்ஸ் அப் நிறுவனத்தின் நான்காம் தூண் வெளியேறியது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 25 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவுடன் மிரள வைக்கும் வசதிகளுடன் களமிறங்கும் ரியல்மீ யூ1

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்