ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை.. 24 மணி நேரமாகியும் மீட்க முடியவில்லை..

child Rescue operations continues for 24 hours

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தையை 24 மணி நேரமாகியும் மீட்க முடியாமல், பேரிடர் படையினர் போராடி வருகின்றனர்.

இதனிடையே, அதனருகே சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கவுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தையான சுர்ஜித்வில்சன் நேற்று மாலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் ெகாண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான்.

அந்த ஆழ்துளை கிணறு தோண்டிய போது தண்ணீர் வராததால், அதை மேல்மட்டத்தில் மட்டும் மண்ணை கொட்டி மூடியிருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால், ஆழ்துளை கிணறு மேல் கொட்டியிருந்த மண்சரிந்து உள்ளே விழுந்திருக்கிறது. அதனால், ஆழ்துளை கிணறு மீண்டும் திறந்து விட்டது. இதனால்தான், அந்த குழந்தை அதன் மீது ஓடும் போது உள்ளே விழுந்து விட்டான்.

குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர், பல்வேறு மீட்பு படையினரும் வரிசையாக வந்து நேற்று மாலை முதல் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர். குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது.

இன்று காலை வரை குழந்தையின் சுவாசம் தெரிந்தது. அதன்பிறகு ஆழ்துளை கிணற்றுக்குள் மண் சரிந்ததால், குழந்தை திடீரென கீழே இறங்கினான். குழந்தையை மீட்க முதலில் ஒரு கயிற்றின் முனையில் சுருக்கு போட்டு உள்ளே நுழைத்து குழந்தையின் ஒரு கையில் மாட்டினர். இதே போல், அடுத்த கையில் மாட்டும் போது அந்த சுருக்கு கழன்று விட்டது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது 30 அடி ஆழத்தில்தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு 70 அடிக்கும் கீழே இறங்கி விட்டான். இதனால் மீட்புப் பணி கடும் சவாலாக இருந்தது.

இந்நிலையில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜனும், விஜயபாஸ்கரும் தொடர்ந்து இந்த மீட்பு பணியை கண்காணித்து வந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ஆழ்துளை கிணறு அருகே ஒரு மீட்டர் தூரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் சுரங்கம் தோண்டி ஆக்ஸிஜனுடன் ஒரு மீட்பு படை வீரரை அனுப்பி குழந்தையை மீட்க முயற்சிக்கப்படும் என்றார்.

இதன்பின்னர். குழந்தை விழுந்த கிணறு அருகே 3 மீட்டர் தொலைவில் 90 அடிக்கு மற்றொரு குழி தோண்டி ஒரு வீரரை அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது.

You'r reading ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை.. 24 மணி நேரமாகியும் மீட்க முடியவில்லை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரசிகர்களை கைதி யாக்கிய கார்த்தியின் கைதி, மகிழ்ச்சியில் கார்த்தி, லோகேஷ், எஸ்ஆர் பிரபு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்