ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மறுவாக்கு எண்ணிக்கை.. தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Radhapuram assembly constituency votes will be recounted tommorow

ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு தடையில்லை என்று அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவும் போட்டியிட்டனர். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நான் 69,541 வாக்குகள் பெற்றேன். அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்றார். அவர் 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு விதிமீறல் நடந்தன. தபால் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை. ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்பட்டனர்.

தபால் வாக்குகளை எண்ணும்போது போலீசாரைக் கொண்டு, எங்களை பலவந்தமாக வெளியேற்றினர். அதே போல், வாக்கு எண்ணிக்கையில் கடைசி மூன்று சுற்றுகளான 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் வாக்கு எண்ணும்போது எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தனது இடைக்கால உத்தரவில், ராதாபுரம் தொகுதியில் நடந்த தேர்தலின் போது 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளில் பதிவான வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டு்ம். இதற்கு வசதியாக அந்த 3 சுற்றுக்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம், அக்.4ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஒருவர் தலைமையில் இந்த வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். இதற்காக தேர்தல் பணியில் முன் அனுபவம் உள்ள 4 அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் டி.வி.ராமானுஜம், இந்த இடைக்கால தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றம் செல்ல விரும்புவதால், மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரினார். இதை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, இன்பதுரை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ராதாபுரம் தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு தடையில்லை. மறு வாக்கு எண்ணிக்கை எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். வாக்கு எண்ணிக்கைக்கு பின் ஆணையம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து, இன்பதுரை மனுவை தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து, ராதாபுரம் தொகுதியின் கடைசி சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 11.30 மணிக்கு மீண்டும் நடைபெறவிருக்கிறது.


You'r reading ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மறுவாக்கு எண்ணிக்கை.. தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லி உள்பட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.. தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்