விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக அமோக வெற்றி..

Admk defeated dmk, congress in vikkiravandi, nanguneri bypoll

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஜூனில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி திடீர் மரணம் அடைந்தார். கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்டம் நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே, எம்.பி.யானதும் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனால், விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காலியாக இருந்த காமராஜ்நகர் சட்டசபை தொகுதிக்கும் நேற்று(அக்.21) இடைத்தேர்தல் நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), புகழேந்தி (தி.மு.க.), கந்தசாமி (நாம் தமிழர்) உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதி இடைத்தேர்தலில் 84.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 பேர் போட்டியிட்டனர். இங்கு 66.35 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

2 தொகுதிகளிலும் இன்று(அக்.24) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அவர் ஒரு லட்சத்து 13,766 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகள் பெற்றார். அதிமுக 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 94,484 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் 62,172 வாக்குகளும் பெற்றனர். இதனால், 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார்.

You'r reading விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக அமோக வெற்றி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தல அஜீத், வலிமை படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா ? ரசிகர்கள் ஷாக்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்