ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 29 வரை தடை

supreme court extended stay in release of Radhapuram constituency recounting result

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ம் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவும் போட்டியிட்டனர். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நான் 69,541 வாக்குகள் பெற்றேன். அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்றார். அவர் 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு விதிமீறல் நடந்தன. தபால் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை. ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்பட்டனர். தபால் வாக்குகளை எண்ணும்போது போலீசாரைக் கொண்டு, எங்களை பலவந்தமாக வெளியேற்றினர். அதே போல், வாக்கு எண்ணிக்கையில் கடைசி மூன்று சுற்றுகளான 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் வாக்கு எண்ணும்போது எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

எனவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தனது இடைக்கால உத்தரவில், ராதாபுரம் தொகுதியில் நடந்த தேர்தலின் போது 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளில் பதிவான வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டு்ம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள கூட்ட அரங்கில், மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவு மற்றும் வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இன்பதுரை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ம் தேதி வரை வெளியிடத் தடை விதித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29-ம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

You'r reading ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 29 வரை தடை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து.. மத்திய அரசு மீது ஸ்டாலின் புகார்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்